எனது 36 வருட சினிமா பயணம்: நாகார்ஜூனா அனுபவப் பேச்சு..
தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘குபேரா’ படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக நாகார்ஜுனா தெரிவிக்கையில்,
‘வெற்றிதான், நடிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறது. சினிமாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது கடினம். இங்கு வெற்றியும் நடிப்பின் மீதான காதலும் கைகோர்த்து இருக்கின்றன. என்னைச் சுற்றி வெற்றியும் இருப்பது என் அதிர்ஷ்டம். கிட்டத்தட்ட 36 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தபோது, நான் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தால் பார்வையாளர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
1990-ல் நான் நடித்த, ‘சிவா’ படம் வெளிவந்த போது, மும்பை, டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் நான் வெற்றியை கண்டேன். கரோனாவுக்கு பிறகு, எல்லோரும் மற்ற மொழி திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.
ஆனால், அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா படமாக ஆகிவிடாது. ஒரு பான் இந்தியா படத்தை உருவாக்க, அதிக திட்டமிடலும் சக்திவாய்ந்த திரைக்கதையும் தேவை. நான் நடித்த ‘சிவா’, இந்தியா முழுவதும் எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது. அதே போன்று, நான் அதிக படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், சில கதைகள் மட்டுமே இந்தியா முழுவதும் வெளியாவதற்குத் தகுதியானது என்பதால் நாங்கள் உருவாக்கவில்லை’ என்றார்.
