மும்மொழிக் கல்வி குறித்து? வைரலாகும் ரஜினிகாந்த் வாய்ஸ்
இன்றைய மும்மொழிக் கல்விச்சூழலில், முன்னதாக சூப்பர் ஸ்டார் தன் மனதில் பட்டதை தெரிவித்த கருத்து வைரலாகிறது. இது பற்றிப் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தற்போது வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, ஒரு விழாவில் ரஜினி கூறியதாவது:
‘எந்த மொழியை நீங்கள் தவறாக பேசினாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கிண்டல் செய்யமாட்டார்கள். ஆனால், ஆங்கிலத்தை தவறாக பேசினார்கள் கிண்டல் செய்வார்கள். அதற்கு பயந்தே பலரும் ஆங்கிலம் பேசவில்லை. ஆங்கிலம் பேச பேசத்தான் வரும்.
எனவே, மாணவர்களாகிய நீங்கள் உங்கள் நண்பர்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளுங்கள். ஆங்கிலம்தான் உங்களின் எதிர்காலம். தற்போது உலகம் கணினி மயமாகிவிட்டது.
ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தான் உங்கள் தொழிலில் நீங்கள் முன்னேற்றம் அடைய முடியும். தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். ஆங்கிலம் கற்றுக்கொண்டு பல மாநிலங்களுக்கு சென்று இளைஞர்கள் பெயரும், புகழும் வாங்கினால் அது தமிழுக்குப் பெருமை. சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்கும், தமிழனுக்கும் தான் பெருமை’ என பேசினார்.
தற்போது, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ள சூழலில், ரஜினியின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மேலும், இதனை பார்த்த ரசிகர்களோ, ‘ஹிந்தியை விட ஆங்கிலம்தான் வளர்ச்சிக்கு உதவும் என மறைமுகமாக ரஜினி சொல்லிவிட்டாரே’ என்பது வைரலாகி வருகிறது.
