சூப்பர் ஸ்டார் ரஜினி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படம் அப்டேட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர்-2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அதன் பிறகு, ரஜினி நடிக்கும் படத்தின் இயக்குனர் யார்? என்ற நிலையில், மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..
இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து, பின்னர், ‘பரியேறும் பெருமாள்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து ‘கர்ணன், மாமன்னன்’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார்.
சிறு பட்ஜெட்டில் சமீபத்தில் வெளியான ‘வாழை’ படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத் தக்கது.
தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதன் பின்னர், மாரி செல்வராஜ் – கார்த்தி கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, உருவாகும் புதிய படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற 12-ந்தேதி ரஜினி பிறந்த நாளில், ரசிகர்களுக்காக புதிய அப்டேட் அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இச்சூழலில், பல வருட நீண்ட வெளிக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கத்திலும் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!