புஷ்பா-2 படம் கைத்தட்டல்களை அள்ளியதா? கிள்ளியதா? : திரை விமர்சனம்
‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது. திரை ஆர்வலர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புஷ்பா-2 திரைப்படம் எகிறி பாய்ந்திருக்கிறதா, இல்லையா? என பார்ப்போம்..
செம்மரக் கடத்தலில் மாஃபியாவாக கோலோச்சி வருகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). போற போக்கில் அசால்ட்டாக தனது எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டுகிறார்.
இச்சூழலில், ஆத்திரமடைந்த முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்), புஷ்பாவை அவமானப்படுத்துகிறார். இதனால், வெகுண்டெழுந்த புஷ்பா தனது சிற்றப்பாவையே (ரமேஷ் ராவை) முதலமைச்சராக்க சபதம் எடுக்கிறார். இதனிடையே, போலீஸ் அதிகாரியாய் வீராப்புடன் கர்ஜிக்கும் செகாவத் என்ற பகத் பாசிலும், புஷ்பாவை பழி வாங்கும் விறைப்புடன் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
இப்படியே சீன் பை சீன் என ஆக்சனுடன் திரில்லரும் மிக்ஸாகி விறுவிறுப்பாய் பயணிக்கின்றது கதையோட்டம்.
இதில், புஷ்பராஜ் தனது சித்தப்பாவை முதலமைச்சராக ஆக்கினாரா? போலீஸ் அதிகாரியான செகாவத்திடம் இருந்து செம்மரக்கட்டைகளை மீட்டாரா? என்பதே தீப்பொறியாய் தெறிக்கிற மீதிக் கதை.
படம், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என நீண்டு ஓடினாலும், பக்கா கமர்ஷியல் கலவையில் பொழுது போவதே தெரியவில்லை.
வெளியில் தொழிலைப் பொறுத்தவரையில் ‘ஆவேசமிகு’ வைலன்ட்; வீட்டுக்குள் தனது மனைவி ஸ்ரீ வள்ளியை (ராஷ்காவை) பொறுத்தவரையில் ‘அன்புமிகு’ சைலன்ட் என இரு வேறு கேரக்டர்களில் கலக்கியிருக்கிறார் அல்லு அர்ஜுன். அவ்வகையில், ஆடியன்ஸின் கைத்தட்டல்களை அள்ளியிருக்கிறார்.
இவருக்கு சற்றும் சளைக்காமல் செம கெத்தாக முறுக்கி, திகில் கிளம்பியிருக்கிறார் பகத் பாசில். இந்த இருவரும் ஒருவருக்கொருவர் மூர்க்கத்தனமாய் நெருங்குகின்ற காட்சிகள் எல்லாம் மிகவும் ரசிக்கத் தக்கவையாக அனல் பறக்கிறது.
படத்தில், ஜெகபதிபாபு, சுனில், பிரம்மாஜி, ஜெகதீஷ் பிரதாப் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் கேரக்டராக வாழ்ந்திருக்கின்றனர். குறிப்பாக, அல்லுவின் வீட்டுக்காரியாகவே மாறியிருக்கிறார் ஸ்ரீ வள்ளியாக நடித்திருக்கும் ராஷ்மிகா. இவரது வசீகரமான வசன உச்சரிப்பும், நளினமான உடல் அசைவுகளும் மனசுக்குள் மதுரசம் ஊற்றிச் செல்கிறது. போதாததற்கு, ஸ்ரீ லீலாவும் ஒரே பாட்டினில் சிலுப்பி கிறங்கடித்து விட்டுச் செல்கிறார்.
ஆக, மசாலா வாசனையும் மல்லிகைப் பூ வாசனையும் மாறி மாறி வருவதுபோல கட்டமைத்த இப்படத்திற்கு, ஒளிப்பதிவும் பின்னணி இசையும் வலிமை சேர்த்திருக்கின்றன.
கதையானது, ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் ஆளுக்கொரு கிளைக்கதையை தூக்கி வருவதனால், ஆங்காங்கே தளர்ந்த திரைக்கதை ஆகிவிட்டது. அந்த நேரங்களில் மட்டும் சலிப்பும் நேரிடுகிறது.
அவ்வகையில், படத்திற்கு ஒட்டாத கிளைக் கதைகளையும் வள வள க்ளைமாக்ஸ் காட்சியையும் குறைத்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
மொத்தத்தில், கரை கடந்த ‘பெஞ்சல்’ புயல் அல்லு அர்ஜுனுக்குள் புகுந்தது போல, படம் நெடுகிலும் செமையாய் தாக்கி விளையாடியிருக்கிறார்.
‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக்’ என்ற ஃபார்முலாவுடன் படமும் கலெக்ஷனில் ‘கனத்த கல்லா’ கட்டியிருக்கிறது. ஆகவே, அடுத்த ஆண்டும் நாம் எதிர்பார்க்கலாம்; அதிரி புதிரியாய் அல்லு அலப்பறையை ரசிக்கலாம்.
புஷ்பா-2 திரை விமர்சனம்
- Rating