96 படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் முக்கிய அறிவிப்பு..
96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல்கள் காண்போம்..
விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் குமார். அதில், “இது வழக்கம்போல் ஒரு தவறான செய்தி. ’96’ படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் ’96’ இரண்டாம் பாகம் எடுக்க முடியும். பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் ’96 பார்ட் 2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாளுக்கு நாள் பெருகி வரும், தீங்கு விளைவிக்கும் இந்த பொய்ச் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி விலகல் செய்தியில் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
