25 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்ஸ்..

ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவா ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். அவ்வகையில் அப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காப்புலா’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் ‘மிஸ்டர் ரோமியோ’ படப் பாடல்களும் ஈர்த்தது.
இந்நிலையில், பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் பேசும்போது, ‘தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரகுமானின் முதல் ஆல்பமான ‘ரோஜா’வை வெளியிட்டு பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது.
பிரபுதேவா நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது’ என்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘மூன்வாக்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

