ஒரே நாள் இரவில் நிகழும் கதை: ‘பிக்பாக்கெட்’ படம் பற்றி இயக்குனர் அப்டேட்ஸ்

ஒரே இரவில் நடைபெறும் நிகழ்வுகளாக ‘கைதி’ படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் எடுக்கவுள்ளார்.
அதேபோல், ஒரே இரவில் நிகழும் கதையாக விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி வெற்றி பெற்றது. இதன் முதல் பாகமும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனரும் படத் தொகுப்பாளருமான பி.ஆர்.விஜய், விதா ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘பிக்பாக்கெட்’. இதில் பி.ஆர். விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாஜகான் இசை அமைக்கிறார். படத்தை ஜே.எஸ்.ஜுபேர் எழுதி இயக்குகிறார். இப்படம் பற்றி அவர் கூறும்போது, ‘இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதை. இரவு 7 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும். பிக்பாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதையையும் அமைத்துள்ளேன்.
பிக்பாக்கெட் திருடர்களுக்குப் பின் பெரிய மாஃபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை வித்தியாசமாக சொல்கிறோம்’ என்றார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் பூஜையுடன் தொடங்கியது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
