சீமான் இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘காதல் ஒழிக’ படம் – வைரல் நினைவலைகள்
காதலர் தினத்தை முன்னிட்டு, பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள் பற்றிக் காண்போம்..
25 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபன் நடிக்க கமிட் ஆகி, பின்னர் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்க திட்டமிடப்பட்டு, இளையராஜா இசையமைக்கவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவும் கமிட் ஆகி இருந்துள்ளார்கள்.
காதலர் தினத்தன்று பார்த்திபன் அந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளதால், இது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
மேலும் அந்த போஸ்டருடன், “காதல் ஒழிக’ இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் அவர்கள் இயக்க, நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் கைவிடப்பட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது.
என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது, அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புது தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது.
நானும் ஒரு ஒலிவாங்கியை போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன். இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும், ‘கடவுள் இல்லை’ – பெரியார் ‘பெரியாரே இல்லை’ – சீமான் அவரவரது குரலை உரக்க ஒலிக்க செய்வதாகவே நான் பார்க்கிறேன்.
நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதை பட்டவர்த்தனமாக (அரசியல் +இன்ன பிற இலாப நோக்கின்றி) பேசுகிறேன்.
புரிந்தோர் பிஸ்தாக்கள் புரியாதோர் பிஸ்கோத்துகள்! சரி காதலுக்கு வருவோம் ! வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு. வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு! என்றோ மிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும்.
‘என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல, போன வருடம் போன காதல் வேறு பூமியில் வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும்.
அது புரியாத-இன்னும் பிரியாத-உயிர்வரை பிரிந்திடாத ஒரு காதலை ‘காதல் ஒழிக’ என இக் காதலர் தினத்தில் கொண்டாடும்!- புதிதாய் பூத்தவர்கள் பூத்தரேக்குலு (pootharekhulu ) சுவைத்து கொண்டாடும், தோத்தவர்கள் காத்திருங்கள்….. அவளை/அவனை சுமந்து கர்ப்பமான இதயத்தில் கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா காதல் உய்க்கும் – பின் பொய்க்கும்” என பெரும் கவிதையே எழுதியுள்ளார். இவரது இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.