Web Ads

சாலையில் ஒரு பெண் ஷூவை கழற்றி அடிக்க வந்தார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புகார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

8.55 மணி இருக்கும். நான் பேட்மின்டன் விளையாடி முடித்துவிட்டு காரை ஓட்டி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். பாலவாக்கம் பல்கலை நகர் சாலையின் இறுதிப் பகுதிக்கு வரும்போது, கொட்டிவாக்கம் AGS Colony பகுதியிலிருந்து ஒரு குறுகலான தெரு, இந்த சாலையில் வந்து இணைகிற இடத்தில் ஒரு சின்ன கார் அதன் வழியாக, படுவேகத்தில் நேராக வருகிறது.

நான் கடற்கரை சாலையை நோக்கி நேராகச் சென்றேன். வளைவிலிருந்து வந்து இந்த சாலைக்குள் வருகிற எந்த வாகனமும் பொறுத்துதானே செல்லும் என நினைத்து போய்க் கொண்டே இருக்கிறேன். ஆனால் அந்த கார் நிற்பதாகத் தெரியவில்லை. நான் நேராகச் செல்ல எத்தனித்துக் கொஞ்சம் தடுமாறி விட்டேன்.

அது நிற்கப் போவதில்லை என்பதை ஒரு நொடியில் உணர்ந்து பெடலை (Accelerator) அழுத்தி சற்று வேகமாக முன்னே சென்றுவிட்டேன். அந்தக் காரைத் தாண்டும்போது, அது இளைஞர்களாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து “என்னப்பா… இப்படி வர்றிங்க?” என்று கையை நீட்டி சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகத் திரும்பினேன்.

அந்தக் காரை ஓட்டியவர் “போடா போடா” என்று சொல்லவும் எனக்கு அதிர்ச்சி. காரை நிறுத்திவிட்டு இறங்கிவந்து என்னவென்று விளங்கிக் கொள்ள போனேன். அதற்குள் அந்தக் கார் திரும்பி என்னைத் தாண்டி வேகமாகச் செல்ல முயற்சித்தபோது நான் காரைத்தட்டி நிறுத்தச் சொன்னேன்.

கண்ணாடியை இறக்கி “டேய் என்னடா ஒனக்குப் பிரச்சனை? நான்தான் போய்ட்டே இருன்னு சொல்றேன்ல்ல!” என்று ஒரு மேல்தட்டுப் பெண்மணி. 48 வயதிருக்கலாம். தொப்பி அணிந்தவராய் “காச் மூச்” என்று விடாமல் இங்கிலிஷிலும் தமிழிலும் கத்திக் கொண்டே இருந்தார்.

நான் சொல்ல வந்ததைக் கேட்கவும் தயாரில்லை. கதவினருகே நின்று கொண்டிருக்கிற என்னைத் தள்ளிவிட கதவைப் படாரென்று திறக்க நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.

‘தப்பா வந்துட்டிங்க.. நீங்க ஒண்ணும் மன்னிப்பெல்லாம் கேக்க வேணாம். சும்மாவாவது போயிருக்கலாம். காரணமே இல்லாமல் போடா வாடாங்குறிங்க.. என்ன உங்க பிரச்சனை” ன்னேன்.

“I’ll call the cops” அப்படின்னுச்சு அந்தம்மா. “புண்ணியமா போகும். மொதல்ல கூப்புடுங்க”னேன். அப்புறம் ஆரம்பிச்சுது பாருங்க.. “கெட்ட வார்த்தை””.. சும்மா சொல்லக் கூடாது. வேற லெவல். ஒண்ணு அந்தம்மாவை ஒக்கார வச்சி கெட்ட வார்த்தை சொல்லிக்குடுத்து வளத்துருக்கணும். இல்ல, அதுல இந்தம்மா பட்டம் வாங்கியிருக்கணும்.

ஆனா எல்லா இங்கிலிஷ்தான். அதுனால சுத்தி நின்னு வேடிக்கைப் பாத்த கூட்டம் ஏதோ மேலிடத்துப் பிரச்சனை போலிருக்குன்னு நெனச்சி ஆர்வமா பாத்துது. எத்தனை ‘Reels’ படம் புடிச்சானுங்களோ தெரில. அடுத்த சில மணி நேரங்களில் தெரியும். ஒரு 15 நிமிடங்கள். அவனே இவனேன்னு இடைவெளி இல்லாமல் தமிழில் அசிங்கசிங்கமா கத்த..

காலில் இருக்குற ஷூவைக் கழட்டி என்னை இரண்டு மூன்று முறை அடிக்க வேற வர… மொதல்ல எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறந்தான் எனக்கு கொஞ்சம் யோசனை வந்துது. இந்தம்மா கதையை வேறமாதிரி கொண்டு போக முயற்சிக்குது… என்னைத் தூண்டி நான் கையை கிய்ய ஓங்கி ஏதாவது செய்திடமாட்டேனான்னு என்னைக் கிளர்ந்தெழச் செய்ய எல்லாத்தையும் முயற்சிக்குதுன்னு புரிஞ்சுது.

இந்த நேரத்தில் பொதுநல சங்கம் வழக்கம்போல் கூடிவிட்டது. குறிப்பிட்ட படித்த ஒருவன் வந்து (37 வயது இருக்கலாம்) என்னை விலகிப் போகச் சொல்லி ரொம்ப நேரம் முயற்சித்தான். ஏன் என்னையே சொல்றான்.. அவன் முன்னாடியே இவ்வளவு ஆக்ரோஷமா அசிங்கமா கத்துதே.. அதை ஒண்ணுமே சொல்லமாட்டேங்குறானே அப்படின்னு நெனச்சேன்.

எந்தப் போக்குவரத்தும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போக முடியாமல் எல்லாரும் நின்றது ஒருபுறம் எனக்கு வருத்தத்தைக் கொடுக்க.. ஆனால் எப்படி இப்படித் தப்பான ஒரு ஆளை அப்படியே விட்டுச் செல்வது என்கிற எண்ணம், இன்னொரு புறம் குழம்ப… இவ்வளவு தவறான ஒரு ஆளுடன் எவ்வளவு இறங்குவது? அது தேவையா..?

இருக்கிற வேலையில் இதையும் சுமந்துகொண்டு மன அமைதியை இழப்பதா? என்று “போ போ.. உன் குடும்பம் உன்னை எப்படித்தான் சமாளிக்குதோ..! ஆனாலும் நீ இந்தச் சமூகத்துக்கு கேடு” ன்னு சொல்லிட்டு நகர்ந்தேன். என்ன மாதிரியான எதிர்வினை அங்கிருந்து வந்திருக்கும் என்பதைச் சரியாக யூகித்திருப்பீர்கள்.

யாரோ ஒருவர் என்னை அடையாளம் கண்டு, அக்கறையோடு என்னவென்று என்னிடம் விசாரிக்க, அவருக்கு ஒருசில வரிகளில் அதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று பார்த்தால்.. என்னை விலகிச் செல்லப் போராடிய அதே இளைஞன் வந்து “ஒண்ணுமில்ல சார்.. போங்க சார்” என்று மிகுந்த அக்கறை காட்டினான்.

“அடப்பாவி.. நீ அந்தம்மா ஆளா?” என்று தலையிலடித்துக் கொண்டு காருக்குச் சென்றேன். அந்த சாம்பல் நிற கார் Maruthi போல இருந்தது.. சரியாகக் கவனிக்கவில்லை. இவ்வாறு கூறிய ஜேம்ஸ் வசந்தன், அந்த காரின் எண்ணுடன் அடையாறு காவல் நிலையத்திற்கும் சென்னை மாநகர காவல் நிலையத்திற்கும் டேக் செய்து ஒரு புகாராகவே சொல்லிவிட்டார்.

ilayaraja explains what is symphony