Meiyazhagan Movie Review
Meiyazhagan Movie Review

96-எனும் பெயரில், சிறந்த காதல் படைப்பை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் என்றால் அது மிகையல்ல. அவர் இயக்கியிருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’. இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.!

அரவிந்த் சுவாமி-கார்த்தி இருவரும் இணைந்து நடித்து, வாழ்வியலை வடித்திருக்கிறார்கள்.

இப்படம், உறவின் சிக்கல்கள் மற்றும் சொந்த பந்தங்களில் நிகழும் பாசம், துரோகம், அரவணைப்பு, ஏக்கம், கண்ணீர், பிரிவு, காதல், திருமணம், துக்கம் என அத்தனை நிகழ்வுகளின் உணர்வுகளையும் உயிரோட்டமாய் கொடுத்திருக்கிறது. சில காட்சிகளில் மனதை நெகிழச் செய்து, கண்கலங்க வைக்கிறது. அதே நேரம் புன்னகைக்கவும் செய்கிறது.

அருள்மொழிவர்மன் என்ற கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் அரவிந்த்சாமி. இவரை சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. இதில், கார்த்தி தனது கதாபாத்திரம் உணர்ந்து வழக்கம் போல, மிக இயல்பாக அசத்தியிருக்கிறார்.

நம்பிய சொந்த பந்தங்களால் சொத்துக்களை இழந்து, அதனால் கடந்த காலத்தை மறந்த நபராக புதிய பரிமாணத்தில் வலம் வருகிறார் அரவிந்த்சாமி. படத்தில் இவரது நடிப்பும் மிகச் சிறப்பு. அனைவரையும் கவரும்.

பொதுவாக, ‘பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது’ என்ற பாடல் வரியைப் போல, நல்ல சொந்தங்கள் நிச்சயம் கை கொடுக்கும்; துணை நிற்கும் என்ற கருத்து அழுத்தமாய் பதியப்பட்டு இருக்கிறது.

இந்த கதையோட்டம், சென்னை மற்றும் தஞ்சாவூரில் நிகழும் விதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு, ஆற்று வெள்ளம், அந்த கால பழைய வீடுகள் என கிராமிய வாசனை கதையோடு ஒன்றி இருக்கிறது. அதனை ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ அருமையாக கொண்டு வந்திருக்கிறார்.

அரவிந்த்சாமிக்கு ‘அத்தான்’ என்கிற உறவாக ராஜ்கிரண் வந்து பாசமழை பொழிகிறார். ‘பாண்டவர் பூமி’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் வந்து, உணர்வியலை சித்தரித்த நடிப்புக்கு இணையாக, இந்த படத்தில் சின்ன கதாபாத்திரம் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்.

படத்தில், குறிப்பாக சலிப்பை ஏற்படுத்தாத வண்ணம் ஆங்காங்கே கதையோடு கூடிய கிண்டலும் நகைச்சுவையும் யாவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.

இளவரசு, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் சுவாதி என பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சிறப்பு. இது, சொந்தங்களை பிரிந்து நிற்பவர்களை கலங்கச் செய்யும். பாடல்களும் மயிலிறகாய் வருடுகிறது.

இவ்வுலகில், தரமான உறவுகளோடு இருப்பதை விட, தனித்து இருப்பது மேலானது என்பது உண்மையாக இருந்தாலும்.. சில நேரங்களில், கூட்டுக் குடும்பமாய் வாழ்வது எவ்வளவு சிறப்பு என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் படம் வலியுறுத்தி இருக்கிறது.

இன்றைய அவசரமயமான எந்திர உலகில், மெய்யான (உண்மையான) அழகன் யார்.? அப்படி யாரும் இருக்கிறார்களா.? ஆம்.. நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களால்தான் பாசமுள்ள பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது; உறவுகள் எல்லாம் கூடி மகிழ்கின்றன என்ற கருத்தியலை, அனைவரும் குடும்பத்துடன் ரசித்து காணும் வகையில் வந்திருக்கிறான் இந்த ‘மெய்யழகன்’. மனதார வரவேற்போம்!

YouTube video