
குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம் ‘குடும்பஸ்தன்’ ஓடிடி.யில் ரிலீஸ்; விவரம்
‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்..
மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் கடந்த மாதம் 24-ந் தேதி வெளியானது. இப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
‘நடுத்தர குடும்பத்தில் ஒரு இளைஞன் என்ன மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கிறான் என்பதை, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மணிகண்டன். இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை என்னவென்றால், ‘வேறு ஜாதிப் பெண்ணான கதாநாயகி சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்கிறார் மணிகண்டன். மாதம் 15,000 ரூபாய்க்கு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
மணிகண்டனின் அக்கா கணவர் சோமசுந்தரம், பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். நல்ல சம்பளத்தை வாங்குவதால், அவருக்கு குடும்பத்தில் மரியாதை. ஆனால், மணிகண்டனுக்கு அந்த மரியாதை இல்லை.
இந்த சூழ்நிலையில் மணிகண்டனுக்கு வேலையும் போய்விடுகிறது. இதனை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து, வட்டிக்கு பணம் வாங்கி சம்பளமாக கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம், அக்காவின் கணவர் சோம சுந்தரத்திற்கு தெரியவர, மணிகண்டனை அவமானப்படுத்தி விடுகிறார். இதனால், பிரச்சினை வெடிக்கிறது.
வேறு வழியே இல்லாமல், பேக்ரி ஒன்றை கடன் வாங்கி ஆரம்பிக்க, கடைசியில் அதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் சான்வி மோகன், தன்மானத்தை விட்டு விட்டு பழைய நிறுவன வேலைக்கு போகச் சொல்கிறார். இல்லையென்றால் நான், என் அம்மா வீட்டுக்கு போய் விடுகிறேன்’ என சொல்ல, வேறு வழியின்றி பழைய வேலைக்கு போகிறார் மணிகண்டன். படம் முழுவதும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படம் தற்போது ஹிட் அடித்து வசூலை அள்ளியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கண்டுகளியுங்கள்.!