
‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவை சினிமாவில் வேறு யாராவது அறிமுகம் செய்யலாம்: ரசிகர்கள் விருப்பம்..
சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை பேரழகு தானே, அதுபோல இதோ மோனலிசா பயோபிக் தொடங்குகிறது எனலாம். இனி, விஷயத்திற்கு வருவோம்..
மத்திய பிரதேசத்தில் இந்தூரை சேர்ந்த 16 வயது மோனலிசா போன்ஸ்லே, மகாகும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியில் தன் பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்றார்.
அவரது கயல் விழிகள், கள்ளமில்லா புன்னகை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதில் மயங்கிய ஒருவர், தான் எடுத்த வீடியோவை இன்ஸ்டா போஸ்ட் செய்ய செம வைரலாய் தெறித்தது. அவரது கொள்ளை அழகுக்கு ‘பிரவுன் பியூட்டி’ என மக்கள் பட்டம் சூட்டி அழைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், மோனலிசாவை தேடி பாலிவுட் சினிமாவில், ராம் கி ஜென்மபூமி, தி டெய்ரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் ஆகிய படங்களை இயக்கிய சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவுக்கு தனது அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது.
இச்சூழலில், சனோஜ் மிஸ்ரா இல்லாமல் வேறு யாராவது, அந்த பிரவுன் பியூட்டியை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் “மோனலிசாவின் ரசிகர்கள்.”
முன்னதாக, மோனலிசாவின் வீடியோ வைரலான பிறகு, பல ஆண்கள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததுடன், தவறாக நடக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள்.
இதை பார்த்து மோனலிசாவின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், மோனலிசாவை இந்தூருக்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார் அவரின் அப்பா.
மோனலிசா குறித்து அவரின் தங்கை வித்யா குறிப்பிடுகையில், ‘மோனலிசாவை பார்க்க பலரும் வந்தார்கள். இதனால், அவரால் மாலை விற்க முடியாமல் போனது. இதையடுத்து, மோனலிசாவை வீட்டிற்கு அனுப்பி வைப்பது தான் சரி என அப்பா முடிவு செய்தார். அக்காவை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்’ என்றார்.
உலகில் ஒப்பற்ற ஓர் ஓவியம் உண்டு. அது ஆகச்சிறந்த கலை வடிவம். அதன் பெயர் மோனலிசா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
