‘நேசிப்பாயா’ படத்தின் கதைச்சுருக்கம் என்ன?: இயக்குனர் விஷ்ணுவர்தன் விளக்கம்..
காதல் பேசும் திரைப்படங்கள் என்றாலே, மறைந்த நடிகர் முரளி ஞாபகத்திற்கு வருவார். இந்நிலையில், அவரது மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. இப்படம் குறித்து இயக்குனர் தெரிவித்த காதலான தகவல்கள் பற்றி பார்ப்போம்..
‘நேசிப்பாயா’ எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். அதிதி ஷங்கர், பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்லின் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஷ்ணுவர்தன் கூறியதாவது:
‘அட்வென்ச்சர் காதல் கதையாக படம் உருவாகியுள்ளது. ஆகாஷ் முரளி திறமையான நடிகர். காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
காதலிப்பவர்கள், காதலித்தவர்கள், இனி காதலிக்க இருப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக கதை இருக்கும்.
போர்ச்சுகல், ஸ்பெயின், பெங்களூரு, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கின்றனர். திடீரென்று ஒரு காரணத்தால் அவர்கள் பிரிந்து விடுகின்றனர்.
அதற்குப் பிறகுதான் அவர்கள் தங்கள் செயலையும், காதலையும் நினைத்துப் பார்க்கின்றனர். மீண்டும் அவர்கள் இணைந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.
இங்கிருந்து செல்பவர்கள், மொழி தெரியாத போர்ச்சுகல் நாட்டில் சிக்கிக் கொள்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது சஸ்பென்ஸ்.
கதை ஓட்டத்தை வேறெந்த கோணத்திலும் மாற்றக்கூடாது என்பதற்காக, மறைந்த முரளியின் காட்சிகளை வைக்கவில்லை. அதுபோல், ஆகாஷ் முரளியின் அண்ணன் அதர்வா முரளியையும் நடிக்க வைக்கவில்லை.
காதலர்களுக்கு இடையே பிரேக்அப் ஆன பிறகு படத்தின் கதை தொடங்குகிறது. வரும் டிசம்பரில் படம் ரிலீசாகிறது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளேன்’ என்றார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
முரளியின் ‘இதயம்’ தொட்ட காதல் போல, அவரின் மகன் ஆகாஷூக்கும் வெற்றி கிட்டட்டும்.!