
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ பட அரங்கம் பார்த்து அதிசயித்தேன்: வெற்றிமாறன் பேச்சு
இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்..
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்ஸ்டன்’ ஹீரோவாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,
‘ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக பணியாற்றிக் கொண்டேயிருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம்.
எந்த இயக்குநர், எந்த தருணத்தில் அவரை சந்திக்க வேண்டும் என்று தொடர்பு கொண்டாலும், உடனடியாக சரியான பதிலை சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம்.
பத்தாண்டு காலம் இசையமைப்பாளராக பணியாற்றிய பிறகு நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது இசைப்பணி நன்றாகத்தானே சென்று கொண்டிருக்கிறது எதற்கு திடீரென்று நடிப்பு? என்று கேட்டேன். ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வை தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன் என்றார்.
ஆனால், அவர் நடிக்க வந்த பிறகு, அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்தி கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் திடீரென்று போன் செய்து தயாரிப்பாளராக போகிறேன் என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு யார் இயக்குநர் என்று கேட்டேன். புது இயக்குநர். ஸீ ஃபேண்டஸி ஜானர் படம், இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார். இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.
இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தை பார்வையிட சென்றிருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி… அதன் இயக்கம் பற்றி தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கை போட்டு பட்ஜெட் எவ்வளவு என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10 சதவீதம்தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள். உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி’ என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதனால் ‘கிங்ஸ்டன்’ படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.