Web Ads

மோசடிப்பணம் பெற்ற வழக்கு: தமன்னா, காஜல் அகர்வாலிடம் போலீஸார் விசாரணை?

‘கிரிப்டோ கரன்ஸி’ தொடர்பான வழக்கில், போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான அசோகன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வலைத்தளங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என வார்த்தையை நம்பி “ஆஷ் பே” கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தார். முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததால், கோவையில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார்.

அங்கு நடிகை தமன்னா உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் விழாவை சிறப்பித்ததை பார்த்த மகிழ்ச்சியில், அசோகன் தான் பேசிய அதே நபரிடம் தொடர்பு கொண்டு கிரிப்டோ முதலீட்டில் தொடர்ந்து ஈடுபட்டார். அப்போது அசோகன் அவரது நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த 10 பேரையும் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் ஈடுபடுத்தினார்.

இதனை அடுத்து 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரம் பகுதியில் நடைபெற்ற கிரிப்டோ கரன்சி நிகழ்ச்சிக்கு அசோகன் அழைக்கப்பட்டார். அங்கு நடிகை காஜல் அகர்வால் விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியில், பல கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனைப்பார்த்த அசோகன் தனக்கு காருக்கு பதிலாக பணம் வேண்டும் என்று 8 லட்சம் ரூபாயை பணமாக பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அசோகன் மற்றும் அவரது நண்பர்கள் 2 கோடியே 50 லட்சம் வரை பல்வேறு தவணைகளாக ஆஷ் பே நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அசோகனின் கிரிப்டோ கரன்சி கணக்கில் ரூ.9 கோடி லாபம் கிடைத்துள்ளதாக அவருக்கு காட்டப்பட்டது.

இதனையடுத்து, அந்த பணத்தை அவர் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், பணத்தை மாற்ற முடியவில்லை. அதன்பிறகு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணையில் இரண்டு பேரை கண்டறிந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், மேலும் 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நிதீஷ்குமார் ஜெயின் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோரின் வங்கி கணக்கு பரிவர்த்தனையை ஆராய்ந்தபோது, போலி கிரிப்டோ கரன்சி நிறுவனத்துக்கு விளம்பரம் செய்த நடிகை தமன்னா மற்றும் நடிகை காஜல் அகர்வாலுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், மோசடி பணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணம் பெற்றுக்கொண்டு பங்கேற்றதற்காக நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டிருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக, நடிகைகள் பெருந்தொகையை பெற்றுக்கொண்டு விளம்பரங்களில் வருவது வழக்கம் என்பது தெரிந்ததே. அப்பணம் எவ்வழியில் வந்தது என்பதுதான் தற்போது விசாரணையாக மாறியுள்ளது.

crypto currency scam police investigation tamannaah and kajal agarwal