சூர்யாவின் கருப்பு திரை விமர்சனம்

Web Ads

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. பல்வேறு தடைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

சென்னையின் ஏழுகிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு செல்வாக்கு மிக்க வழக்கறிஞராக இருப்பவர் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி). சட்டத்தின் மூலம் நீதி தேடி வரும் சாதாரண மக்களிடம் பணம் பறிப்பதும், அதிகாரம் உள்ளவர்களை காப்பாற்றி லாபம் அடைவதும் அவரது தொழிலாக உள்ளது.

இதற்கிடையில், மகள் பினுவின் சிகிச்சைக்காக நகையை விற்க வந்த தந்தை (இந்திரன்ஸ்), கொள்ளையடிக்கப்படுகிறார். போலீசார் நகையை மீட்டாலும், அதை மீண்டும் பெற நீதிமன்ற நடைமுறைகள் அவசியமாகிறது. உதவிக்காக பேபி கண்ணனை நாடும் அந்த குடும்பம் மேலும் சிக்கலில் சிக்குகிறது. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறார் வழக்கறிஞர் சரவணன் (சூர்யா). அவர் யார்? ஏன் இந்த வழக்கில் தலையிடுகிறார்? என்பதையே மாஸ் மற்றும் பக்தி கலந்த கமர்ஷியல் பாணியில் சொல்லியுள்ளார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.

‘நன்மை vs தீமை’ என்ற வழக்கமான மாஸ் ஃபார்முலாவை எடுத்துக்கொண்டாலும், அதில் பக்தி, அதிரடி, மாஸ் தருணங்கள், வண்ணமயமான காட்சிகள் என அனைத்தையும் இணைத்து திருவிழா போன்று ஒரு திரை அனுபவத்தை வழங்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.

சரவணன் கதாபாத்திரத்தில் சூர்யா முழுக்க முழுக்க வின்டேஜ் மாஸ் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். பஞ்ச் வசனங்கள், உணர்ச்சி காட்சிகள், அதிரடி சண்டைகள் என ரசிகர்களை கவர்கிறார். ஆனால், படத்தின் பல பகுதிகளில் அவர் இல்லாததால், சில நேரங்களில் இது நீளமான கேமியோ போல் தோன்றுகிறது.

 

ஆர்.ஜே. பாலாஜி, வில்லன் கதாபாத்திரத்தில் தனது வழக்கமான நகைச்சுவை டச் மற்றும் வில்லத்தனத்தை கலந்த நடிப்பை வழங்கியுள்ளார். இருப்பினும், அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிக ஆழம் இருந்திருக்கலாம்.

திரிஷா, கோர்ட் காட்சிகள் மற்றும் சூர்யாவுடன் வரும் சில முக்கிய தருணங்களில் கவனம் ஈர்க்கிறார். இந்திரன்ஸ் மற்றும் அனகா மாயா ரவி ஆகியோர் தந்தை – மகள் உறவை உணர்ச்சிப்பூர்வமாக கொண்டு சென்றுள்ளனர். நட்டி நட்ராஜ் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சிறிய வேடத்தில் வந்தாலும் ஷிவதா தனது நடிப்பால் மனதில் நிற்கிறார்.

ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மாஸ் காட்சிகளும், கோர்ட் ரூம் காட்சிகளும் காட்சியமைப்பில் பிரமாண்டமாக இருக்கின்றன. சாய் அபயங்கரின் பின்னணி இசை படத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது. குறிப்பாக மாஸ் காட்சிகளின் பில்டப்பை இசை மேலும் உயர்த்துகிறது. விக்ரம் மோர் அமைத்த இடைவேளை சண்டைக் காட்சி ரசிகர்களை கவர்கிறது. ஆனால், சில கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்னும் தரமாக இருந்திருக்கலாம்.

சட்டத்தின் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை விமர்சிப்பதோடு, அதே சட்டத்தின் மூலம் நல்ல மாற்றங்களையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையையும் படம் பேசுகிறது. பக்தி மற்றும் நேர்மையை மையமாக வைத்து, தீமைக்கு எதிரான போராட்டமாக கதையை வடிவமைத்த விதம் பாராட்டத்தக்கது.

தெய்வம் மனித உருவில் வந்து உதவும் பழைய கதையை, தெய்வமே நேரடியாக களமிறங்கும் ஃபேண்டஸி அம்சத்துடன் சொல்ல முயன்றிருப்பது சுவாரஸ்யமான ஐடியா. ஆனால், அந்த அம்சம் முழு நீளத்தில் வலுவாக கையாளப்படாததால் சில இடங்களில் படம் மந்தமாகிறது.

சூர்யாவின் பழைய பட குறிப்புகள், ‘லியோ’ உள்ளிட்ட சமகால ரெஃபரென்ஸ்கள் ரசிகர்களுக்கு கைதட்டல் தருணங்களை உருவாக்குகின்றன. ஆனால், அவை கதையின் மையத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இருப்பினும், இந்த குறைகளை தாண்டி பார்க்கும்போது, ‘கருப்பு’ ஒரு மாஸ் கமர்ஷியல் படமாக ரசிகர்களுக்கு கொண்டாட்டமான திரை அனுபவத்தை வழங்குகிறது.

Karuppu

70%

சூர்யாவின் கருப்பு திரை விமர்சனம்

  • Rating