‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தயார்: கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு..
கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் காண்போம்..
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படம் நாளை ரிலீஸாகிறது. முன்னதாக நிகழ்ந்த இப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘கன்னடம் தமிழிலிருந்து வந்தது’ என கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது தெரிந்ததே.
இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்று நடைபெற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை இப்போது வெளியிடவில்லை. வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், ஒரு வார கால அவகாசம் தேவை என கமல் தரப்பினர் கேட்டனர்.
இந்நிலையில், இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைவராக உள்ள தமிழ்நாடு நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், தக் லைஃப் படத்தை தடை செய்வது, தள்ளி வைப்பது இரு மாநில திரையுலக உறவை பாதிக்கும்.
கன்னடத்தைச் சேர்ந்த சிவராஜ்குமார், கிஷோர், உபேந்திரா உள்பட பலர் தமிழ் சினிமாவில் நடித்து வருவதாகவும், இரண்டு திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களும் இணக்கமான உறவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு, கமல்ஹாசன் எந்த மொழியையும் தாழ்த்தி பேசவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சூழலில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமலுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என கூறியிருக்கிறது. கர்நாடகாவிலும் கமல் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆதலால், ‘தக் லைஃப்’ படத்தை இங்கு திரையிட விரும்புகிறோம். கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘தக் லைஃப்’ படத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்’ என கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் நரசிம்மலு கூறியிருக்கிறார். அவ்வகையில், இவ்விவகாரத்தில் நல்லதோர் நிகழ்வை விரைவில் எதிர்பார்க்கலாம்.
