நடன இயக்குனர் சங்கத்தலைவர் தினேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டு; அடிதடி, போராட்டம்..
நடன இயக்குநர் தினேஷ் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் சங்கத் தலைவர் தினேஷ் மீது, தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய தினேஷ், கடந்த 25 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், லோக்கல் சரக்கு, நின்னு விளையாடு, ஒரு குப்பை கதை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ‘லியோ’ படத்தில் வரும் ‘நான் ரெடி தான் வரவா’ பாடலுக்கு 1000 பேரை நடனம் ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சம் தினேஷ் பெற்றுள்ளார். ஆனால், அந்தப் பாடலில் நடனம் ஆடியவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தினேஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், நடன இயக்குனராக இருக்கும் மாரி மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தினேஷ் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறிய நடன இயக்குனர் கௌரிசங்கர் மீது, தினேஷ் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதலும் நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், நடன இயக்குனர் சங்கத் துணைத் தலைவரான கல்யாண் மாஸ்டர் தலைமையில் பொதுக்குழு கூடியுள்ளது. அங்கு, தினேஷ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கல்யாண் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கல்யாண் தரப்பினர் நடன இயக்குனர் சங்கத்தின் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தியாகராய நகர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், தினேஷ் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கல்யாண் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
