விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..
ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு:
நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுத்தார். இந்த விவாரத்தில் எனக்கு உடன்பாடில்லை, நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்துப் பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேசக் காத்திருக்கிறேன்’ என விளக்கம் வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, விவாகரத்து வழக்கு, கடந்த மாதம் சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில், ஜெயம் ரவி நேரில் ஆஜராகி இருந்த நிலையில், ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகியிருந்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதீபதி, குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்துப் பேச வேண்டும் என்றும், அதுகுறித்த விவரம் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெயம் ரவி தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். ‘சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை’ என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பின், இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு தள்ளி வைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தாண்டில் நற்செய்தி சொல்லட்டும்; ஜெயம் ரவி வாழ்க்கை புது மலர்ச்சி கொள்ளட்டும்.!