இந்தியாவின் முதல் மொட்டோகிராஸ் படம் ‘பைக்கர்’

Web Ads

முன்னணி நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ள “பைக்கர்” திரைப்படம், இந்தியாவின் முதல் மொட்டோகிராஸ் (Bike Sports) திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ள இப்படம், UV Creations தயாரிப்பில் விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.

பான் இந்திய அளவில் உருவாகியுள்ள இந்த படம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 2026 ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படக்குழு சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து படத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டது.

நிகழ்வில் பேசிய மோட்டார் சைக்கிள் பயிற்சியாளர் ரோஷிணி, இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இன்னும் நெருக்கமாக உணர்ந்ததாகவும், இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் இது பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன், படத்தில் கலை அமைப்பு வெளியில் தெரியாமல் இருந்தாலும் அதன் பின்னால் பெரும் உழைப்பும் நுணுக்கமும் உள்ளதாக கூறினார். இரண்டு காலகட்டங்களில் நகரும் கதைக்கேற்ப பைக்குகள், ரேஸ் டிராக்கள் மற்றும் சூழலை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்ததாகவும், வெளிநாடுகளிலிருந்து பல பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார்.

ஒளிப்பதிவாளர் மதி, ரேஸ் காட்சிகளை படம் பிடிப்பது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தாலும், குழுவின் ஒத்துழைப்பால் அதை சிறப்பாக நிறைவேற்றியதாக தெரிவித்தார். தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் ஷூட்டிங் அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாகவும் கூறினார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், வேகம் மற்றும் உணர்ச்சி நிறைந்த இந்தக் கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், பைக் ரேசிங் உலகின் ஒலியை உணர்த்த சவுண்ட் டிசைனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் கூறினார். இப்படம் இந்திய அளவைத் தாண்டி சர்வதேச அளவிலும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி, “பைக்கர்” படம் வெறும் ரேஸ் பற்றிய கதை அல்ல, ஆழமான மனித உணர்வுகளையும் கொண்டதாகும் என்று கூறினார். தமிழ் ரசிகர்களை இந்தப் படம் நிச்சயம் கவரும் என்ற நம்பிக்கையுடன், எதிர்காலத்தில் தமிழ் படமும் இயக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் பகிர்ந்தார்.

நடிகர் நிரூப், இந்தப் படம் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான வாய்ப்பாக அமைந்ததுடன், நல்ல நண்பர்களையும் கொடுத்ததாக தெரிவித்தார்.

நடிகை மாளவிகா நாயர், சென்னை ரசிகர்களின் அன்பு எப்போதும் தனித்துவமானது என்றும், இப்படத்திற்கும் அதே ஆதரவை தருமாறு கேட்டுக்கொண்டார்.

டாக்டர் ராஜசேகர், தனது உடல்நிலை சவால்களை பகிர்ந்து கொண்டு, இப்படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நடிகர் ஷர்வானந்த், “பைக்கர்” தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும், இந்த கதாபாத்திரத்திற்காக பெரும் அர்ப்பணிப்புடன் உடல் மாற்றம் செய்ததாகவும் கூறினார். இந்திய சினிமாவின் முதல் மொட்டோகிராஸ் படமாக இது பெருமை பெறும் என்றும் தெரிவித்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “பைக்கர்” திரைப்படம், வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.