Pushpa 2

அனைத்து இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும்: இளையராஜா உருக்கமான அழைப்பு..

இன்று பவதாரிணி முதலாம் ஆண்டு நினைவு நாள். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள ஆடியோ விவரம் காண்போம்..

இசையுலகுக்கு கிட்டிய வரம் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்களும் இசைத்துறையில் உள்ளனர்.

அதேபோல், பவதாரிணி என்ற மகளும் இருந்தார். அவரும் பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் என இரு முகங்களை கொண்டிருந்தவர். பவதாரிணி மீது இளையராஜாவுக்கு பெரும் பிரியம் உண்டு. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பவதா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள்.

இச்சூழலில், பவதாவுக்கு புற்று நோய் இருப்பது சில வருடங்களுக்கு முன்பு தெரிய வந்தது. அதனையடுத்து முதலில் அவருக்கு இந்தியாவில் வைத்து சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், இலங்கைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வருடம் இதே நாள் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் நிலைகுலைய செய்தது. அவருக்கு இறக்கும்போது வயது 38 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் இளையராஜாவின் சொந்த ஊரில் அவரது மனைவி ஜீவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி, இளையராஜா உருக்கத்துடன் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த ஆடியோவில், ‘எனது அருமை மகள் பவதா எங்களை விட்டு பிரிந்த நாள். அவர் மறைந்த பிறகுதான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்புமயமாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.

ஏனெனில், எனது கவனம் இசை மீது மட்டும்தான் இருந்ததால், குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டது இப்போது எனக்கு வேதனையை தருகிறது. அந்த வேதனைதான் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது கொஞ்சம் எனது மனதுக்கும் ஆறுதலாக இருக்கிறது.

பவதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 12-ம் தேதிதான் அவருடைய திதி வருகிறது. அது இரண்டையும் சேர்த்து நினைவு நாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற முடிவெடுத்திருக்கிறோம். அதில், அனைத்து இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

ilayaraja daughter bhavatharani first year memorial day
ilayaraja daughter bhavatharani first year memorial day