
ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?: அரசியல்-திரைவட்டார எதிர்பார்ப்பு..
தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ திரைப்பட பணியிலும் பிஸியாக இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, முதன் முறையாக ஆளுநர் தேநீர் விருந்துக்கான அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
நாளை 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். இதனை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில் விஜய் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ‘குடியரசு தினம்’ ஆகும். இந்நிலையில், நாளை ஆளுநர் ரவி சென்னை கிண்டியிலுள்ள ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்றது கடுமையான விமர்சனங்களை பெற்றது.
‘ஆளுநருடைய கருத்தியல் சார்ந்த விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் பதவியின் மீதும் அந்த பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொண்டோம்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து இருந்தார்.
ஆனால், அது பலத்த எதிர்வினைகளை பெற்றதால் இந்த ஆண்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், முதல் முறையாக கட்சி தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் ஆளுநரை தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, பெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், அதற்கு முன்னதாக ஆளுநர் பதவி தேவையில்லை என பேசியிருந்தார்.
இந்நிலையில், நாளைய நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டாலும் விமர்சனம் கடுமையாக இருக்கும். கலந்து கொள்ளாவிட்டாலும் அதற்கேற்ப விமர்சனங்கள் எழும். இச்சூழலில், விஜய் எடுக்கும் முடிவு என்ன? என்பது அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!
