ஹாய் திரைவிமர்சனம்

Web Ads

தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, காதல் கைகூடாததால் அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மறுபுறம், தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளரும் நயன்தாரா, திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற, அதில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சென்னையில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் கவினும் நயன்தாராவும் நண்பர்களாகப் பழகுகின்றனர். நயன்தாராதான் தான் எதிர்பார்த்த காதலி என நினைக்கும் கவின், அவரை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால், காதல் மற்றும் திருமணம் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என நயன்தாரா கூறுவதால், தனது காதலை கவின் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொள்கிறார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு கணவன் – மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை இருவருக்கும் ஏற்படுகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாராவை காதலிக்க வைக்க கவின் முயற்சி செய்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா என்பதே ‘ஹை’ படத்தின் கதை.

கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் மீதான ஏக்கம், எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நயன்தாராவுடன் நடிக்கும் காட்சிகளில் தனது முதிர்ச்சியான நடிப்பால் வயது வித்தியாசத்தை மறைத்து, இயல்பான நடிப்புடன் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காமெடி காட்சிகளிலும் கவின் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

நயன்தாரா கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருந்தாலும், தனது வழக்கமான நடிப்பு பாணியிலேயே பயணிக்கிறார். நவீன உடைகளில் அவரது திரைத் தோற்றம் கூடுதல் பளிச்சென்று இருக்கிறது. முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும், சில காட்சிகளில் அவரது வயது முதிர்ச்சி கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒட்டாமல் இருப்பது சற்று உறுத்துகிறது.

Web Ad 2

கவினின் அம்மாவாக ராதிகாவும், அப்பாவாக கே.பாக்யராஜும், நயன்தாராவின் தந்தையாக பிரபுவும் தங்களது அனுபவமான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் வரும் சுஹாசினி மணிரத்னமும் கவனம் ஈர்க்கிறார்.

சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரின் காமெடி காட்சிகள் படத்தின் பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக சத்யனின் மைண்ட் வாய்ஸ் காட்சிகள் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தை அழகான வண்ணங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நயன்தாராவின் தோற்றத்தை பளிச்சென்று காட்டியிருக்கிறார்.

ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை காதல் காட்சிகளின் உணர்வுகளை அழகாக கடத்துகிறது. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, படத்தின் இலகுவான கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், மிகவும் எளிமையான காதல் கதையை எந்தவித சிக்கலான திருப்பங்களும் இல்லாமல், இதமான உணர்வுகளுடன் நகர்த்தியிருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பெரிய திருப்பங்கள் இல்லாமல் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நகைச்சுவை காட்சிகள் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து ஈர்க்கிறார்.

நயன்தாராவின் தோற்றம் சில காட்சிகளில் கதாபாத்திரத்துடன் முழுமையாக பொருந்தாமல் இருப்பது படத்தின் சிறிய குறையாக தெரிகிறது. இருப்பினும், கவினின் அளவான, முதிர்ச்சியான மற்றும் இயல்பான நடிப்பு அந்தக் குறையை மறக்கடிக்கிறது.

மொத்தத்தில், பெரிய திருப்பங்கள் இல்லாதபோதிலும், காதல், காமெடி மற்றும் இதமான உணர்வுகளுடன் ரசிக்க வைக்கும் ஒரு எளிமையான காதல் படமாக ‘ஹாய்’ அமைந்துள்ளது.

60%

ஹாய் திரைவிமர்சனம்

  • Rating