இசை, பாட்டு, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தனுஷின் நட்பு குறித்து ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து இசையமைத்து, இயக்குனர் பாலா உள்பட பல இயக்குனர்களின் படங்களில் நடித்து, தயாரிப்பாளராகவும் ஆக்டிவ்வாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் நடித்து தயாரித்து வெளியான கிங்ஸ்டன் படம் மற்றும் இசை, பாடல், பணி பற்றி மனம் திறந்து கூறியதாவது:
‘இருபது வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் அனுபவத்தால் பலவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என இருந்தாலும் நல்ல ஆல்பங்களை ரசிகர்களுக்கு என்னால் கொடுக்க முடிகிறது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்காக ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடலை இசையமைத்தேன். கதையை அடிப்படையாகக் கொண்டு மென்மையான இசை அல்லது வேறு ஜானரில் பாடலை உருவாக்குகிறேன். இது கதையுடன் தொடர்புடையது. ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் முழுக்க முழுக்க இயக்குனரின் வழிமுறையை பின்பற்றிதான் இசையமைத்தேன்.
அந்தப் பாடலுக்கு தனுஷ் என்னிடம், வரிகள் எப்படி இருக்கும், பாடல் எப்படி பேசப்படப் போகிறது என்பதை சொன்னார். அதன்படியே அந்தப் பாடலில் கொஞ்சம் ஃபங்கியாகவும், வித்தியாசமாகவும் நவீனமாகவும் அந்தப் பாடலில் ஏதேனும் செய்வதற்கு முயசித்தோம். அதனால், கோல்டன் ஸ்பேரோ பாடல் மக்களிடம் ஒர்க் அவுட் ஆகிவிட்டது.
நான் நடித்து இசையமைத்து தயாரித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் சரியாக போகவில்லைதான். அதற்காக, எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. ஒரு படம் ஒர்க் அவுட் ஆகுமா இல்லையா, எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை கவனிக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே நான் எனது கவனத்தை செலுத்துகிறேன். 100 சதவீத உழைப்பை கொடுக்கிறேன்.
அடுத்ததாக இட்லி கடை, குட் பேட் அக்லி, வீர தீர சூரன், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல், சுதா கொங்கராவின் பராசக்தி படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நடிகராக இயக்குநர் செல்வராகவன் இயக்கும் (மெண்டல் மனதில்) படத்திலும் நடிக்கிறேன். அது காதல் ஜானரில் உருவாகும் படம்.
தனுஷுடன் நான் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் சினிமாவில் ஒன்றாக வளர்ந்திருக்கிறோம். அந்த வகையில் எங்களுக்கிடையே ஆழமான புரிதல் இருக்கிறது. எங்களுக்குள் உரையாடலும் நன்றாக இருக்கும். எனவே ஹிட் பாடல்களை எளிதாக கொடுக்க முடிகிறது. இட்லி கடை பாடல்களும் கண்டிப்பாக அருமையாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.