போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்..
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கிற்கு பேசும் வகையில் ஒரு படமும் இன்னும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் அறிமுகமானவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கவுதம் ராம் கார்த்திக். இப்படத்தினை சூரிய பிரதாப் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘நாளைய இயக்குநர் சீசன் 1’ மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சூரிய பிரதாப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சயின்ஸ் பிக்ஷன் கலந்த க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகவுள்ளது. இதில் கவுதம் ராம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில், பெரும்பாலான காட்சிகளை சென்னையை சுற்றி படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதில் கவுதம் ராம் கார்த்திக்குடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன.
மேலும், படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படமாவது கவுதமிற்கு பேர் பெற்றுத் தருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
