2027 புத்தாண்டு ரிலீஸாக பகத் பாசில் – பிரேம்குமார் கூட்டணியின் ‘அசரீரி’

Web Ads

‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரேம் குமார், அடுத்ததாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழுவில் மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவாளராகவும், கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, குமார் கங்கப்பன் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்.

Web Ad 2

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து இயக்கும் பிரேம் குமார் மற்றும் தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்க்கும் ஃபஹத் ஃபாசில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘அசரீரி’ திரைப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fahadh Faasil - Prem Kumar’s Asareeri Set for a New Year 2027 Release