Pushpa 2

அரசாங்க இடத்தை விலை பேசிய விவகாரம்: விக்னேஷ் சிவன் விளக்கம்

தனுஷ்-நயன்தாரா விவகாரம் ஒருபுறம் என்றால், அரசாங்க இடத்தை வாங்க முயற்சித்ததாக கூறப்படும் விக்னேஷ் சிவன் விவகாரம் மறுபுறம்; சரி விஷயத்துக்கு வருவோம்..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், கீர்த்தி ஷெட்டி, சீமான், கெளரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்திலிருந்து ‘தீமா தீமா..’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, அண்மையில் புதுச்சேரி சென்றிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், புதுவை மாநில சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது அவர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான சீகல் ஹோட்டலை விலைக்கு கேட்டதாகவும் அதற்கு அமைச்சர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், அரசுக்கு சொந்தமானதை யாராவது விலைக்கு கேட்பார்களா? என விக்னேஷ் சிவனை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.’ நான் பாண்டிச்சேரிக்கு என்னுடைய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்பதற்காக சென்றிருந்தேன். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தேன்.

அந்த சமயத்தில் என்னுடன் வந்தவர், அவருக்கு தேவையான சிலவற்றைப் பற்றி விசாரித்தார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, என்னை விமர்சித்து மீம்ஸ் போட்டுள்ளனர். அதை நான் ரசித்தேன்’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்கு, நெட்டிசன்ஸ், ‘தாமதமாக வந்தாலும், தரமான விளக்கம். நம்பிட்டோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.