நீங்க என்னை இயக்குனீங்க, நான் உங்க மகனை இயக்குறேன்: ஷங்கரிடம் பிரபுதேவா?
ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறாரா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா பக்கமே தலைகாட்டாமல் உள்ளார். இளைய மகள் அதிதி, விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஷங்கரின் மகன் அர்ஜித், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்
முன்னதாக ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியதாக ஷங்கரே கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அர்ஜித் விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பிரபுதேவா இயக்க உள்ளார்.
ஏற்கனவே தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கிய பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜித்தை இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இதேபோல், விஜய்யின் மகன் சஞ்சய்யும் (டைரக்ஷனுக்கு பிறகு) ஹீரோ ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக நடித்த பிரபுதேவா, தற்போது ஷங்கர் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.