தமிழ்ப்படங்கள் இன்னும் ரூ.1000 கோடி வசூலை தொடவில்லையே ஏன்?: மணிரத்னம் பதில்..
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜுன் 5-ந் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்கள் எளிதாக ரூ. 1000 கோடி வசூல் செய்கின்றன. ஆனால், இன்னும் எந்த தமிழ்ப்படமும் ரூ.1000 கோடி வசூலை தொடவில்லையே ஏன்? என மணிரத்னத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
‘பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்காக மட்டும் தான் நாம் படம் எடுக்கிறோமா? இல்லை. நல்ல படங்களைக் கொடுக்க முயற்சி செய்கிறோமா? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
முன்பெல்லாம், படம் நன்றாக இருக்கிறதா, சுமாராக இருக்கிறதா இல்லை மோசமாக இருக்கிறதா என்று தான் பேசப்படும். ஆனால், தற்போது பாக்ஸ் ஆபீஸில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது பற்றி தான் அதிகம் பேசப்படுகிறது. இது போன்ற அழுத்தங்களால் கற்பனைத் திறன் பாதிக்கப்படலாம். இது எதிர்காலத்தில் நடக்காது என நம்புகிறேன்’ என்றார்.
தற்போது ஒரு படம் ரிலீஸானால் அது தினமும் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்று ரசிகர்கள் தேடுகிறார்கள். படத்தின் தரத்தை விட, அதன் வசூல் விபரத்தில் தான் ரசிகர்களின் கவனம் இருக்கிறது. படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பற்றிக் கவலைப்படாமல், சந்தோஷமாக பார்த்து ரசிக்கவும் என முன்பு சூர்யாவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வசூலை விட, படம் எப்படி இருக்கிறது என பார்த்தால் நன்றாக இருக்கும் என மணிரத்னம் கூறியிருக்கிறார். அவர் ரசிகர்களை ஈர்க்க, படம் எடுக்கும் நிலையில் ‘தக் லைஃப்’ 1000 கோடி வசூலை தாண்டுமா என ரசிகர்கள் விவாதிக்கிறார்கள்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன்2, சூர்யா நடிப்பில் கங்குவா, தற்போது தக் லைஃப், இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஆகஸ்ட்டில் ரிலீஸாகும் ‘கூலி’ என 1000 கோடி வசூலையே ரசிகர்கள் விவாதிப்பது கலைத்திறனை பாதிக்கும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
