என்னைப் பற்றி என்ன பேசினாலும், எனக்கு பிரச்சினை இல்லை: ஐஸ்வர்யாராய் பதிலடி

‘என்மீது உங்களுக்கென்ன அவ்வளவு அக்கறை’ என சூடாகியுள்ளார் ஜஸ். இது பற்றிக் காண்போம்..
நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன்-ஜஸ்வர்யா ராய் இருவருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக தகவல் பரவியது. ஆனால், அதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தார்கள்.
இது குறித்து அபிஷேக்பச்சன், ‘என்னையும் ஐஸ்வர்யா ராயையும் வைத்து இஷ்டத்துக்கு கதை எழுதிக் கொள்கிறார்கள்’ என பதிலடி கொடுத்தார். அதேபோல், ஐஸ்வர்யா ராயும் தனது செயல்பாடுகள் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.
இச்சூழலில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார். அப்போது, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு வந்தார். அதிக உடல் எடையுடன் இருந்தார். இதன் காரணமாக, அவரை ஒருசிலர் உருவக்கேலி செய்தார்கள்.
இந்நிலையில், தன்னை உருவக்கேலி செய்தவர்களுக்கு பதிலடியாக பேசிய அவர், ‘என்னுடைய மகள் ஆராத்யா பிறந்த பிறகு, எனது உடல் எடை கொஞ்சம் கூடியது. அதனால், பல சந்தர்ப்பங்களில் என்னை உருவக்கேலி செய்தார்கள். இதில், என் உடல் எடை கூடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று எனக்கு தெரியவில்லை.
மகள் பிறந்த பிறகு நான் எடை கூடினேனா அல்லது உடலில் நீர் பிடித்ததா எனும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வதில் மற்றவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் ஏன் என்று தெரியவில்லை. என்னைவிட என் மீது உங்களுக்கு அக்கறை அதிகமா? எனது எடையால் எனக்கு எந்த பிரச்சினையும் வரவே இல்லை. என்னைப் பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டாலும், என்ன பேசினாலும் எனக்கு பிரச்சினை இல்லை’ என்றார்.
