காதல், பணம், துரோகம் பற்றி இயக்குனர் பாலாவின் அனுபவப் பேச்சு..
உளியொன்று தாக்கத் தாக்க, கல்லொன்று சிற்பமானது. ஆதலால் வாழ்வில் வருகிற வலிகளை தாங்கி, தன்னிலை அறிந்தால் வெற்றி நிச்சயம்.! இப்ப விஷயத்திற்கு வருவோம்..
இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளனர்.
வணங்கான் படத்தின் ரிலீஸ் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படக்குழு இன்று சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 10ந் தேதி திட்டமிட்டபடி வணங்கான் ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் பாலாவின் வணங்கான் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், சில கேள்விகளுக்கு பாலா கூறிய பதில்கள் பார்ப்போம்..
பணத்தைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?: பணம் என்னை பாடாய்படுத்திவிட்டது, பணம்தான் முக்கியம் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகும். ஆனால், அந்த பணத்தை கொடுத்து என்னை வாங்க முடியாது.
முதல் படத்தின் சம்பளம்?: சேது படத்தை மிகப்பெரிய சிரமத்தில் தான், எடுத்தோம். இதில் சம்பளம் வேறயா. அந்தப் படத்திற்கு நான் சம்பளம் வாங்கவில்லை. நந்தா படத்திற்குத் தான் முதன் முதலில், சம்பளம் வாங்கினேன். அதுவும் டாலராக வந்ததால், எவ்வளவு என்று தெரியவில்லை.
துரோகம்?: வாழ்க்கையில் நிறைய துரோகங்களை பார்த்து இருக்கிறேன். ஒரு சில துரோகங்களை மன்னித்து விடுவேன், ஒரு சில துரோகங்களை மரணத்தில் இருக்கும் போது கூட மன்னிக்க மாட்டேன், மறக்கவும் மாட்டேன். அந்த துரோகம் என்ன என்று இப்போது சொல்ல முடியாது.
காதல் என்பது?: என் வாழ்க்கையிலும் வந்தது. ஆனால் வந்ததே தெரியாமல் போய்விட்டது. முன்பு காதல் என் வாழ்க்கையில் இருந்தது. ஆனால், காதல் இப்போது அந்நியப்பட்டு விட்டது இப்போது என் வாழ்க்கையில் காதல் இல்லை.
தனிமையை எப்படி உணர்கிறீர்கள்?: தனிமையாக இருப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் சில நேரம், யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனசு ஏங்கும்.
சாதி என்பது?: சாதி என்று ஒன்று இருந்தால் தானே அது பற்றி கருத்து சொல்ல முடியும். சாதி இருக்கிறது என்று அவர்களே சொல்லிக் கொண்டால் எப்படி.
சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட கொழுக்கட்டை போன்றது, ஆளாளுக்கு அவர்களின் கைக்கு ஏற்றபடி பிடித்து, அதற்கு ஒவ்வொரு பெயரை வைத்துக் கொண்டார்கள். இதனால், எனக்கு சாதியில் எந்தவித உடன்பாடும் இல்லை, நம்பிக்கையும் இல்லை.
மரணம் பற்றி?: உறங்குவது போலும் சாக்காடு… உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. தினம் தினமும் செத்து செத்துத்தான் பிழைத்துக்கொண்டு இருக்கிறோம்.
அனைவருக்கும் மரணத்தின் மீது பயம் இருக்கிறது. எனக்கும் மரணத்தின் மீது அடிக்கடி பயம் வந்து போகும்’ என்றார் பாலா.
![director bala life and vanangaan movie release date](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/vanangaan1.webp)