விடாமுயற்சியா, வணங்கானா? முந்தி போகும் திரைப்படம் எது?: கோலிவுட் காத்திருப்பு..
பொங்கல் பண்டிகையில் விடாமுயற்சி, வணங்கான் என்ற இரண்டு படங்களில் முந்தப் போவது எது? என கோலிவுட் வட்டாரம் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி பின்னர், பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தை மீண்டும் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படம், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரோஷினி பிரகாஷ், ரித்தா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், இந்த படத்தை தனது குடும்பத்துடன் பார்த்த, நடிகர் அருண் விஜய் உருக்கமான வார்த்தைகளால், பாலாவுக்கு நன்றி கூறியிருந்தார்.
மேலும், இந்த படம் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், ரிலீஸ் தேதி அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் என்பதால், ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகாத படங்கள் பின் வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது அஜித்துடனான மோதலை, அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ உறுதி செய்துள்ளது. தற்போது, புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, ‘வணங்கான்’ திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக, வரும் ஜன-10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலா இயக்கத்தில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இயக்குனர் பாலா இந்த படத்தின் மூலம் தன்னுடைய மேலும் தரமான படைப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், படம் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு கூடியுள்ளது.
எப்படியோ, இந்த பொங்கல் பண்டிகை, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பது உறுதி.!