ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி..
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்-2’ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து, தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தார் அருண்குமார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளவர் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இந்த காம்போ மூன்று முறை இணைந்த நிலையில், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான அருண்குமார், மீண்டும் ‘சிந்துபாத்’ என்ற படத்திலும் இணைந்தனர்.
பின்னர், சிந்தார்த் நடிப்பில் ‘சித்தா’ என்ற படத்தை இயக்கி வரவேற்பும் பாராட்டும் பெற்றார். இந்நிலையில் சீயான் விக்ரமுடன் ‘வீர தீர சூரன்’ படத்தில் கூட்டணி அமைத்தார். படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு, பிருத்வி ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். ஒரே இரவில் நிகழும் கதையாக உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் தனது அடுத்த படத்தை அவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படம் முடிந்து, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையில் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்துக்கான ஷுட்டிங் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, ரஜினியின் ‘ஜெயிலர்-2’ மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள சிம்புவின் ‘அரசன்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

