ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘டீசல்’ படக்கதை என்ன தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்..
டீசல் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் கொண்டு, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் வருகிற17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும். இதுவரை யாரும் சொல்லாத டீசல் மாஃபியாவின் அறியப்படாத கதைகளை இந்தப் படத்தில் கூறியுள்ளோம்’ என்கிறார் டீசல் பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி. இது தொடர்பாக அவர் கூறியதாவது,
‘பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் உயர்ந்தால்கூட, ஒரு மாத வாழ்க்கைச் செலவில் பத்தாயிரம் ரூபாய் வரை மாற்றம் ஏற்படலாம். டீசல் திரைப்படம் பல ஆச்சரியங்களுடன் வருகிறது. நாம் சாலையோரக் கடைகளில் குளிர்பானங்கள் வாங்குவது போல பெட்ரோல், டீசல் கிடைக்கும் ஓர் இடம். அப்படி ஒரு கருவில் இருந்துதான் டீசல் கதை உருவாக்கப்பட்டது. இப்படம், ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ், எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த என்டர்டெய்னர்’ என தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் நாயகிகளாக அதுல்யா ரவி மற்றும் அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் வினய் ராய், சாய்குமார், கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர், இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
