துருவ் விக்ரமின் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

Web Ads

மைத்ரி மூவி மேக்கர்ஸ் – கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘#MythriTamil04’ / ‘#DV4’ படத்தின் பூஜை விழா!

நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘#MythriTamil04’ (#DV4) படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், துருவ் விக்ரமின் நான்காவது திரைப்படமாக உருவாகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் தரமான மற்றும் பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தனது நான்காவது தயாரிப்பாக இந்தப் படத்தை அறிவித்துள்ளது. சென்னை அலுவலகத்தில் நடைபெற்ற பூஜை மற்றும் முகூர்த்த நிகழ்ச்சியில் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சசி, ‘ஹாய் நானா’ சௌர்யுவ், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ், ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், இயக்குநர் கீர்த்தீஸ்வரன் முதல் காட்சிக்கான கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்தப் படத்தில், துருவ் விக்ரமுடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் இணைந்து கதையை எழுதியுள்ளனர்.

படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா படத்தொகுப்பை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யலமஞ்சிலி இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் இந்தப் படத்தில் முழுமையான மாஸ் தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இதுவரை வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து வந்த அவர், இந்த முறை பரந்த ரசிகர்கள் வட்டத்தை கவரும் வகையிலான கமர்ஷியல் கதையில் நடிக்கிறார்.

அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.