பைசன் காளமாடன் படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.
இளம் நடிகரான துருவ் விக்ரம், தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மெருகேற்றி வரும் நிலையில், தனது மூன்றாவது திரைப்படத்திலேயே சைமா சிறந்த நடிகர் விருதை வென்றிருப்பது அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் துணிவும் போராட்ட குணமும் கொண்ட விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்தார். கதாபாத்திரத்திற்கேற்ப தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக கதாபாத்திரத்தின் உணர்வுகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் திரையில் வெளிப்படுத்திய விதம் கவனம் பெற்றது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், அதிதி ஆனந்த் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பைசன் காளமாடன்’ படத்திற்காக கிடைத்துள்ள இந்த சைமா விருது, துருவ் விக்ரமின் நடிப்புப் பயணத்தில் முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது.
தற்போது துருவ் விக்ரம், ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார்.
