
சூர்யா நடிக்கும் படத்தின் கதை மீது, இயக்குனர் சந்து பெரிய நம்பிக்கை
‘தண்டேல்’ பட இயக்குனர் சந்து, தனது அடுத்த படக்கதை பற்றிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்..
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘பேட்டைக்காரன்’ படத்திலும் நடித்து வருகிறார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரோலெக்ஸ்’ படமும் வெயிட்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ பட வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் சந்து ஆகியோர் உறுதிப்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக, இயக்குனர் சந்து மொண்டேட்டி கூறியதாவது: ‘சூர்யா சாருடைய படத்தின் கதை மிகவும் பெரியது. இப்போதும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை மட்டுமே இப்போதைக்கு கூற முடியும். அக்கதையின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. சூர்யா சார் மாதிரி ஒரு நடிகரால் மட்டுமே அக்கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்’ என தெரிவித்துள்ளார். இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி படம் முடிவடைந்ததும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் சூர்யா. அதன்பிறகு, ‘தண்டேல்’ இயக்குனரின் படப்பிடிப்பு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.