22-ந்தேதி நடன நிகழ்ச்சி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்: பிரபுதேவா வாய்ஸ்
பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி வரும் 22-ந்தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ.வில் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
அருண் ஈவண்ட்ஸ் சார்பில், பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி.22-ந்தேதி நடைபெறுகிறது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா, பரதம், ஃபோக், வெஸ்டர்ன் வகைகளின் கலவையை தனது நடனத்தில் வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து 1989-ல் வெளியான ‘இந்து’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர், காதலன், லவ் பேர்ட்ஸ் என பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். குறிப்பாக ‘மின்சாரக் கனவு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்ததற்கு தேசிய விருதையும் பெற்றார்.
பின்னர் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவ்வாறு நடன இயக்குநர், நடனக் கலைஞர், நடிகர், திரைப்பட இயக்குநர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட பிரபுதேவா, இதுவரை தனது நடன நிகழ்வை லைவ் ஆக நடத்தியதில்லை. இந்நிலையில், முதன் முறையாக லைவ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக பிரபுதேவா கூறியதாவது: இப்படியொரு நிகழ்ச்சி நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. லைவ் நிகழ்ச்சி என்னும்போது சினிமாவில் பார்ப்பது போல் எதிர்பார்க்க முடியாது. அங்கு ஒரு பாடலுக்கு இடையில் ஏராளமான கட் இருக்கும். மேடையில் அப்படி முடியாது. தொடர்ச்சியாக 8 நிமிடங்கள் வரை ஆட வேண்டியிருக்கும். இதற்காக தொடர்ந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறேன்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விட 200 சதவீத திறமையான நடனத்தை வெளிப்படுத்துவேன். இந்நிகழ்ச்சி கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்’ என்றார்.