ஏ.ஆர்.முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணியில் ‘சிக்கந்தர்’ படம் டீசர் வெளியீடு: எப்போ தெரியுமா?
பாலிவுட்டில் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ பட டீசர் வெளிவரும் விவரம் பற்றி பார்ப்போம்..
கோலிவுட்டில் அஜித் நடிப்பில் ‘தீனா’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து ரமணா, கஜினி, துப்பாக்கி என பல படங்களை இயக்கி மாஸ் இயக்குனராக பறந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது டோலிவுட், பாலிவுட் என பிஸியாக இருக்கும் இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்க, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார், மற்றும் சத்யராஜ், பிரதீக் பப்பர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் நடித்தபோது, சல்மான் கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்தார்.
டிசம்பர் 27-ம் தேதியான வெள்ளிக்கிழமை சல்மான் கான் தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவர் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் காலை 11.07 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி மற்றும் மாதுங்காவை போல, கோரேகானில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ரம்ஜான் விடுமுறைக்கு ‘சிக்கந்தர்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதன்பிறகு, தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் முழு கவனமும் செலுத்துகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.