‘அங்கீகாரம்’ வெற்றி விழா: படக்குழுவினர் நெகிழ்ச்சி

Web Ads

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு, படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகர் ஆண்டனி, படத்தின் வசனங்கள், கதைக்களம் மற்றும் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக பதிவு செய்த விதம் குறித்து பாராட்டினார். இசையமைப்பாளர் ஜிப்ரான், சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார்.

நடிகை இசபெல்லா, இது தனது முதல் முக்கியமான திரைப்படம் என்றும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் அளித்த நம்பிக்கையால் இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார். நடிகை வசுந்தரா, உண்மை சம்பவத்தை மிகைப்படுத்தாமல் வாழ்க்கைக்கு நெருக்கமாக சொல்லியிருப்பது படத்தின் பலம் எனக் குறிப்பிட்டார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான், சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்வு செய்யும் கே.ஜெ.ஆரை பாராட்டியதுடன், இப்படம் மேலும் பலரிடம் சென்றடைய இரண்டாவது வாரத்திலும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன், கதாநாயகன் கே.ஜெ.ஆர் ஒரு தடகள வீரராக திரையில் இயல்பாக தோன்றுவதற்காக கடுமையாக உழைத்ததாகவும், விளையாட்டு வீரர்களின் போராட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக படம் பதிவு செய்துள்ளதாகவும் பாராட்டினார்.

ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத், இயக்குநரின் தெளிவான காட்சிக் கற்பனையும், பீட்டர் ஹெய்னின் வழிகாட்டுதலும் ஸ்போர்ட்ஸ் காட்சிகளை சிறப்பாக உருவாக்க உதவியதாக கூறினார். எடிட்டர் தினேஷ்குமார், தொழில்நுட்பக் குழுவின் ஒற்றுமையே படத்தின் தரத்தை உயர்த்தியதாக தெரிவித்தார்.

இயக்குநர் தென்பாதியான், பல கட்டங்களை கடந்து உருவான இந்தக் கதையை கே.ஜெ.ஆர் நம்பி நடித்ததே படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் என்றும், அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் கூறினார்.

தயாரிப்பாளர்கள் அருள் முருகன் மற்றும் அஜித் பாஸ்கர், இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பில் உருவான இந்தப் படத்தை மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான கே.ஜெ.ஆர், “படம் தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றிக்கு முழு காரணம் இயக்குநர் தென்பாதியான் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் உழைப்புதான். இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தில் உழைத்த அனைவரின் கனவும் வெற்றி பெற வேண்டும்; தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினார்.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘அங்கீகாரம்’ திரைப்படத்தை, பா. ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரரின் வாழ்க்கையையும், அவர் நடத்தும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்ட இப்படத்தில் கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் தற்போது ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.