‘அந்த 7 நாட்கள்’ புதிய படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் பேச்சு..

கே.பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா நடிப்பில் வெளியான பழைய திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. தற்போது அறிமுக இயக்குநர் எம்.சுந்தர் இயக்கியுள்ள ‘அந்த 7 நாட்கள்’, கே.பாக்யராஜிடம் தலைப்பை அனுமதி வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.
காதல் படமான இதில் அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் எம்.சுந்தர் கூறும்போது, ‘இது காதல் கதை என்றாலும், வழக்கமான காதல் கதையாக இருக்காது. கதையில், த்ரில்லர் மற்றும் சூரிய கிரகணம் தொடர்பான விஷயங்களும் இருக்கின்றன. நான் கே.பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவன்.
அவருடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘அந்த 7 நாட்கள்’ ஆகிய படங்களின் தலைப்புகள் இந்தப் படத்துக்குப் பொருந்தும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். ‘அந்த 7 நாட்கள்’ சரியாகப் பொருந்தும் என்பதால், அதை முறையாக அனுமதி வாங்கி பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால், அந்தப் படத்தின் கதைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
படத்தின் ஹீரோ அஜித்தேஜ், ஆந்திராவை சேர்ந்தவர். நாயகி ஸ்ரீஸ்வேதா, மலையாளத்தில் வெப் தொடர்களில் நடித்துள்ளார். இதன் கதை சென்னை மற்றும் கொடைக்கானலில் நடக்கிறது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் சச்சின் என் மகள். செப்.11-ந்தேதி படம் வெளியாக இருக்கிறது’ என்றார்.
