நடிகர் விஷால் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி வர வேண்டும்: வைரலாகும் இணைய பதிவுகள்..
நடிகர் விஷாலுக்கு என்னாச்சு? என்ற கேள்விக்கு உண்மையான காரணம் தெளிவுபட இல்லாததாலோ.. அல்லது கூற முடியாததாலோ.. இணைவாசிகள் புரிந்தும் புரியாமலும்.. “அவர் மீண்டு வர வேண்டும்; மீண்டும் வரவேண்டும்” என்பது வைரலாகி வருகிறது.
அதாவது, அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ விலகியதை தொடர்ந்து பல படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. இதில், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் (12 ஆண்டுகளுக்கு பிறகு)
வெளியாகிறது.
சுந்தர்.சி, விஷால் காம்போவில் படம் உருவாக போவதாக கடந்த 2012-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதே வேகத்தில் ‘மதகஜராஜா’ படப்பிடிப்பு துவங்கி, நடந்து முடிந்தது. படத்தில் சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, (மறைந்த நடிகர்கள்) மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, உள்பட பலர் நடிக்க, விஜய் ஆண்டனி இசையமைத்தார்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘மத கஜ ராஜா’ படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்தார். சதாவும் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ‘எம்.ஜி.ஆர்’ என அழைக்கப்பட்டு வந்த இப்படம், திட்டமிட்டப்படி வெளியாகவில்லை.
இதனையடுத்து, சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீர் ரிலீஸை முன்னிட்டு இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருந்த நிலையில், விஷாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அப்போது, விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. மைக்கை பிடிக்க முடியாமல் ஒருவிதமான நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் பேசினார். அவர் மதகஜராஜா குறித்தும், படத்தில் பாடியது தொடர்பாகவும் பேசினார். முழுமையாக விஷால் பேசி முடித்த பிறகு, அவரின் உடல்நிலை குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி,
‘விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். கடும் காய்ச்சலுடனே படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்’ என விளக்கம் அளித்தார். இதனிடையில் விஷால் நடுக்கத்துடன் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.
இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்னாச்சு? என கவலையுடன் இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர். அத்துடன் மீண்டும் அவர் பழைய விஷாலாக ஃபார்முக்கு திரும்பி வர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.