‘நடிகர் சூரியின் வளர்ச்சி பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சூரி. இவரது நடிப்பில் தற்போது ‘மாமன்’ படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ‘விடுதலை’ படத்தின் வாயிலாக சூரியை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் வெற்றிமாறன். பின்னர் கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 படங்களில் அசத்தினார்.
இந்நிலையில் தற்போது ‘மாமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கி வரவேற்பினை பெற்ற பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். கதையை சூரியே எழுதியுள்ளார்.
இந்நிலையில் ‘மாமன்’ படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘மாமன்’ டிரெய்லரை சில தினங்களுக்கு முன்பாக பார்த்தேன். வெற்றி பெறுவதற்கான கமர்ஷியல் அம்சங்கள் அத்தனையும் உள்ளது. இதனால், படம் வெற்றியடையும் என நினைக்கிறேன்.
சமீபகாலமாக குடும்ப கதைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது. அவ்வகையில் மாமன் நிச்சயமாக வெற்றி பெறும். சூரி அண்ணனின் வளர்ச்சியை பார்க்கையில் பிரம்மிப்பாக உள்ளது. அனைவருக்கும் அவருடைய வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் நான் படங்களை தயாரித்து வருகிறேன். அதில் பத்து கதைகள் வந்தால் ஐந்து கதைகள் சூரி அண்ணனுக்காக வருகிறது. அதை பார்க்கையில் நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார். தற்போது இத்தகவல் வைரலாகி வருகிறது.