விநோத பேய்களின் பிடியிலிருத்து விமர்சகர் தப்பித்தாரா?: டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்

விமர்சனம் என்பது புகழ்ச்சியாய் இருந்தால் இனிக்கும்; இகழ்ச்சியாய் இருந்தால் கசக்கும் தானே.

என்றும் எச்சூழலிலும் எச்சபையிலும் விமர்சனம் என்பது நேர்மையாக இருந்தாலே, மக்கள் மதிக்கும் மாசற்ற சிறப்புதான். இப்ப, டிடி நெக்ஸ்ட் லெவல் பட விமர்சனத்திற்கு வருவோம்.

படத்தின் இயக்குனர் பிரேம் ஆனந்துக்கு யார் மீது என்ன கோபமோ? அதாவது, சினிமாவில் நெகட்டிவ் ரிவ்யூவர்களை தேடிக் கொல்லும் விசித்திர பேய்தான்ங்க இந்த படத்தோட ஒன் லைன்..

யூடியூப் சேனலில் சினிமா ரிவியூவராக இருக்கிறார் கிருஷ்ணா (சந்தானம்). அவருக்கு இருதயராஜ் (செல்வராகவன்) என்பவரிடமிருந்து குடும்பத்துடன் தனது படத்தைக் காண அழைப்பு வருகிறது.

சந்தானம் தனது அப்பா (நிழல்கள் ரவி) அம்மா (கஸ்தூரி) தங்கை (யாஷிகா) காதலி (கீர்த்திகா) இவர்களுடன் செல்கிறார். தியேட்டருக்குள் செல்லும் சந்தானமும் அவரது குடும்பமும் திரைப்படக் காட்சிகளில் வருகின்ற கதாபாத்திரங்களாகவே மாயமாய் மாறி விடுகின்றனர். இதற்கு காரணம் (விசித்திர பேய்) இருதயராஜ் என தெரிகிறது.

இந்த மாய உலகத்திலிருந்து சந்தானமும் அவரது குடும்பமும் தப்பித்தனரா? எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதை காமெடி என்ற பெயரில் பேய்க்கதை விட்டிருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி- சிக்கலான கதையை புரிய வைக்க விவரித்து, சிரிப்பூட்ட முயற்சிக்கிறது. இரண்டாம் பாதியில்- எப்படியோ கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது. இதில் சந்தானத்தின் நியூ லுக், பாடி லாங்குவேஜ், டைமிங் சென்ஸ் என அவ்வப்போது காமெடியில் ஸ்கோர் செய்வது ரசிக்க தக்கவையாக அமைகிறது.

மேலும், கௌதம் மேனன்-யாஷிகா லவ் போர்ஷன் நகைச்சுவை விருந்து எனலாம். ஹீரோயின் கீர்த்திகா அந்தரத்தில் பறக்கும் பேயாக அழகாக அலைகிறார். ஆங்காங்கே மட்டரகமான கழிவறை காமெடிகளை தவிர்த்திருக்கலாம், முகம் சுழிக்க வைக்கின்றன.

பேரடைஸ் தியேட்டர் கலர் மற்றும் கப்பல் சீன்ஸ், டே அன்ட் நைட் எஃபெக்ட்ஸ் என ஒளி வண்ணங்களால் இரு மாறுபட்ட உலகை வார்த்து முத்திரை பதித்திருக்கிறார் தீபக்குமார். பங்களா செட்-அப் உள்பட ஆர்ட் வொர்க்கில் கவனம் ஈர்க்கிறார் ஏ.ஆர். மோகன்.

இந்தக் கதைக்கு பாடல்கள் அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. அப்ரோவின் பேக் ரவுண்ட் மியூஸிக் பரவாயில்லை.

மொத்தத்தில் படம் எப்படின்னா.. புத்திசாலித்தனமாய் கதையெடுத்து, அதை திரைக்கதையாய் சுவாரஸ்யப்படுத்துவதில் சொதப்பலாகி விட்டது.

அவ்வகையில், ஹை லெவலுக்கு செல்ல வேண்டிய டிடி ரிட்டர்ன்ஸ்.. லோ லெவலுக்கு வழுக்கி விட்டது. ஆம்.. கதையெல்லாம் ஜாலம்; திரைக்கதைதான் மாயம்.!

50%

டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்

  • Rating
DD Next LevelDD Next Level Movie ReviewDD Next Level ReviewDevils Double Next LevelDevils Double Next Level Movie ReviewDevils Double Next Level ReviewGautham Vasudev MenonGeethikaKasthuriMaranMotta RajendranNizhalgal RaviRedin KingsleySanthanamSelvaraghavanyashika anandடிடி நெக்ஸ்ட் லெவல்டிடி நெக்ஸ்ட் லெவல் - திரை விமர்சனம்