நடிகை லதாவுடன் ரஜினி காதலா; எம்.ஜி.ஆர். கோபப்பட்டாரா?: அன்று நிகழ்ந்தது என்ன?
‘உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை; பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை’ ஆம், அதுபோல ஓர் நிகழ்வு பற்றிய விளக்கம் காண்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. அவ்வகையில், நடிகை லதாவுடன் இணைக்கப்பட்டு பரவும் வதந்தியும் ஒன்று.
அதாவது ரஜினிக்கும், லதாவுக்கும் காதல் இருந்ததாகவும்; அதனை பிடிக்காத மறைந்த எம்ஜிஆர், தனது ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்ததாகவும்; அங்கு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. ஆனால், அது உண்மைதானா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். இந்நிலையில்,
நடிகை லதா தெரிவிக்கையில்,
‘ரஜினிகாந்த் ரொம்பவே நல்லவர். அவர் எனக்கு நல்ல நண்பர். அந்த சமயத்தில் ரஜினிகாந்த் வளர்ந்துவரும் நடிகர். நான் அப்போதே பிரபலமாக இருந்தேன். அதிலும் எம்ஜிஆர் ஹீரோயின் என்றும் பெயர் எடுத்திருந்தேன்.
நான், ரஜினிகாந்த், மஞ்சுளா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஆழியார் அணைக்கட்டில்தான் நடந்தது.
அப்போதே விஜயகுமாரும், மஞ்சுளாவும் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ரஜினியும் அப்போது எங்களுடன் பழகினார். மாலை வந்தால் எங்களுடன் வந்து அமர்ந்து பேசுவார். கோயிலுக்கு ஒன்றாக போவோம்.
மற்றபடி, என்னையும் ரஜினியையும் இணைத்து வைத்து ஏகப்பட்ட கதைகளை சொல்வார்கள். ஆனால், அதிலெல்லாம் துளியளவும் உண்மையில்லை. இன்றுவரை நான் அவரை மதித்துக் கொண்டிருக்கிறேன். அவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த மனிதர்.
இப்போது அவர் உலகளவில் புகழடைந்திருக்கிறார். ஆனால், அது எதையுமே அவர் தன்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ளவே இல்லை. அப்போது, எப்படி பழகினாரோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் எனக்கு ரஜினிகாந்த்தை மிகவும் பிடிக்கும்’ என்றார்.
‘நிலை உயரும்போது பணிவு கொண்டால், உலகம் உன்னை வணங்கும்’ என்பதற்கு ரஜினி சார் பொருத்தம்தானே.!