தப்பான படத்தை ஓட வைக்காதீங்க: வைரலாகிறது நடிகர் சூர்யாவின் கருத்து
கங்குவா திரைப்படம் கடும் விமர்சனங்களால் களை இழந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா தெரிவித்துள்ள திடீர் கருத்து வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குநர் சிவா இயக்கிய இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், கங்குவாவின் வசூல் குறித்து அப்டேட் கொடுத்து வருகிறது. அவ்வகையில் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.89.32 கோடி வசூல் கொடுத்துள்ளது என்றும், முழுக்க முழுக்க பிளாக்பஸ்டர் ஹிட் என்றும் தெரிவித்துள்ளது.
சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கங்குவா குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். அதன்படி, படத்தில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளது. எதிர்மறையாக விமர்சிப்பவர்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
படத்தில், 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. படத்தில் சத்தம் இரைச்சலாக இருக்கிறது. வேறு எந்த பெரிய படத்திற்கும் வராத விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு மட்டும் வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், சூர்யா பேசியது இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சரியான படத்தை மட்டுமே ஓட வையுங்கள். என்னோட படமாக இருந்தாலும் சரி, தப்பான படத்தை ஓட வைக்காதீங்க. அப்போது தான் நல்ல கதைக்காக நான் ஓட முடியும்’ என்று 2013 ஆம் ஆண்டு கூறியிருக்கிறார்.
தற்போது, கங்குவா நெகட்டிவ் விமர்சனம் பெற்று வரும் நிலையில், சூர்யா தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி தெறிக்கிறது.