நம்ம ஊரு மக்களுக்கும் புரிகிற மாதிரி பொழுதுபோக்கு படம்: சர்தார்2 பற்றி எஸ்.ஜே.சூர்யா
கார்த்தி நடித்த ‘சர்தார்-2’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்..
பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள சர்தார்2 ப்ரோமோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய எஸ்.ஜே. சூர்யா,
‘சர்தார் 2 படத்தின் கதையை மித்ரன் என்னிடம் சொன்னதுமே, நான் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால், நான் நடிக்கும் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் உருவாக்கிய விதம், படத்திற்காக அவர் எடுத்த முயற்சி என அனைத்தும் சேர்ந்து ஓர் அழகான படமாக உருவாகி இருக்கிறது.
ஹாலிவுட்டில் வரும் ஸ்பை படத்தை, நம்ம ஊரு மக்களுக்கும் புரியும் வகையிலும், என்டர்டைன்மெண்ட் செய்யும் வகையிலும் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். பல நல்ல இயக்குனர்கள் நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுக்கிறார்கள். நானும் அவர்கள் சொல்வது போல நடித்துக் கொடுக்கிறேன். இப்படத்தில் நான் மிகவும் என்ஜாய் பண்ணி நடித்திருக்கிறேன்.
நிச்சயம், ஒரு நல்ல படமாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், நான் தயாரிப்பாளரிடம் படத்தை இந்தியில் நேரடியாக வெளியிடுங்கள் என்று ஒரு வேண்டுகோளையும் வைத்து இருக்கிறேன். இப்படம் பான் இந்திய அளவில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் நிற்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது, தயாரிப்பாளர், நடிகர் கார்த்தி, படத்தின் இயக்குனர் மித்ரன். மூன்று பேர் தான். இவர்கள் கலையை நேசித்து ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்ததால், இந்த படம் ஒரு நல்ல படமாகவே வந்திருக்கிறது. இவர்களுடன் பணியாற்றியதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கார்த்தி இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அவருக்கு மேக்கப் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும், அதை எடுப்பதற்கு 45 நிமிஷமாகும். அந்த அளவிற்கு அவர் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்..!