ஷாருக்கான் பட வசூலை ஓவர் டேக் செய்த லோ பட்ஜெட் படம்: அமீர்கான் சாதனை..
பாலிவுட் திரையுலகில் கலெக்ஷன் கிங் என பேர் எடுத்தவர் ஷாருக்கான். இவரை, குறைந்த பட்ஜெட்டில் எடுத்த படமொன்று ஓவர் டேக் செய்திருக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்..
ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு நடித்த ‘ஜீரோ’ படம் தோல்வி அடைந்ததை அடுத்து, சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். இதனால், அவர் நடிப்பில் 2023-ம் ஆண்டு வரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆக வில்லை.
பின்னர், 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘பதான்’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான். அப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் வேட்டையாடி ரூ.1000 கோடி வசூலை வாரிக் குவித்தது.
தொடர்ந்து, அதே ஆண்டில் அவர் மற்றுமொரு 1000 கோடி வசூல் படத்தை கொடுத்தார் ஷாருக்கான். அப்படம் தான் ஜவான். அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களோடு நிற்காமல் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டுங்கி என்கிற படத்தை கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார் ஷாருக்கான். அந்த ஆண்டு மட்டுமே அவர் நடித்த படங்கள் மட்டும் சுமார் 2500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு போட்டியாக உள்ள மற்றொரு நடிகர் என்றால், அது அமீர்கான் தான். இவரது ‘தங்கல்’ படம் தான் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படமாகும், அந்த சாதனையை எந்த படமும் இதுவரை முறியடிக்கவில்லை.
இந்நிலையில், ஷாருக்கானின் பதான் பட சாதனையை அமீர்கான் தயாரிப்பில் வெளியான லாபட்டா லேடீஸ் திரைப்படம் முறியடித்துள்ளது. அதுவும் இந்தியாவில் அல்ல ஜப்பானில்.
‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் ஜப்பானில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதில், ஆச்சர்யம் என்னவென்றால், ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், அதன் வசூலை முறியடித்துள்ள லாபட்டா லேடீஸ் திரைப்படத்தை வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார் அமீர்கான்.
‘பதான்’ படம் ஜப்பானில் 2.70 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 45 நாட்களைக் கடந்து ஜப்பானில் வெற்றிநடை போட்டு வரும் ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் 2.70 கோடிக்கு மேல் வசூலித்து தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாலிவுட் படம், ஜப்பானில் சக்கை போடு போட்டு வருவது சாதனையாக பேசப்பட்டு வருகிறது. மேலும், திரை ஆர்வலர்கள் அனைவரையும் சிந்திக்கவும் வைத்துள்ளது.