அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் இறுதி டிரைலர் வெளியீடு!

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் புதிய டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சக்திவாய்ந்த வில்லனான டாக்டர் டூமை எதிர்கொள்ளும் காட்சிகள் இறுதி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் எனப் பல்வேறு சூப்பர் ஹீரோ அணிகள் ஒரே களத்தில் இணைவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து, தங்களது இருப்புக்கே அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள டாக்டர் டூமை எதிர்கொள்வதே இப்படத்தின் மையக்கதையாகும். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகும் இந்தப் பிரம்மாண்ட மோதல் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் மெக்ஃபீலி மற்றும் மைக்கேல் வால்ட்ரான் திரைக்கதை எழுதியுள்ளனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிட்டோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ்-பாக்ராக், வியாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், இயன் மெக்கெல்லன் மற்றும் பேட்ரிக் ஸ்டீவர்ட்டும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 17-ம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்பினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குத் தொழில்நுட்பங்களிலும் வெளியாகவுள்ளது.