F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட் படத்தின் போஸ்டர் வெளியீடு

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், திகில் மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. ஹாரர், திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களையும் இணைத்து வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், இருண்ட பின்னணியில் மர்மமான கட்டிடத்தைச் சுற்றி அச்சத்துடன் மேலே நோக்கும் தாயும் மகனும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போஸ்டர் படத்தின் திகில் பின்னணியையும், கதையில் நிறைந்திருக்கும் மர்மத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். இதற்காக இருவரும் புதிய வீட்டில் குடியேறுகின்றனர். ஆனால், அந்த வீட்டில் அடுத்தடுத்து நிகழும் மர்மமான மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வீட்டின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மமும், அங்கு நிகழும் திகிலூட்டும் சம்பவங்களுமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன.
ஹாரர் காட்சிகள், விறுவிறுப்பான திரில்லர் திருப்பங்கள் மட்டுமின்றி குடும்ப நகைச்சுவை, காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியான கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்ரீஜித் எடவானா இசையமைப்பதுடன் பின்னணி இசையையும் கவனிக்கிறார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐயப்பன் நாயர் எம்.எஸ். படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜாக்கி ஜான்சன் புராஜெக்ட் டிசைனராகவும், தீபு சந்திரன் விஎஃப்எக்ஸ் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியுள்ளனர். நவீன் கண்ணன், பீம் ஜி, நவீன் மாரார், ரஞ்சித் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சி.எம். சாதிக் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவைப் பணிகளையும், சரண் விநாயக் ஒலி எடிட்டிங் பணிகளையும் கவனித்துள்ளனர்.
சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து, வரும் ஜனவரி 2027-ல் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் கவனம் ஈர்த்துள்ள ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’, ஹாரர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
